சார்ந்து விடு

சார்ந்து விடு

ஆணைகொளக் காத்திருக்கும்
அன்பனிவன் மடல்
ஆதரவில் லாததனால்
அழுதவிழிக் கடல்

காணுகிற நாள்எதுவோ
காலம்சொலும் பதில்
காலம்பதில் தரும்வரையும்
கவலைமிக இதில்

ஏன்றவரை பார்த்திருந்தும்
என்னவளின் உரை
இங்குவர வில்லைஇது
எத்தனைநாள் வரை

நோன்றவரை நோற்றிருந்த
நோன்புகளும் சதம்
நூற்றுக்குமேல் ஆயினும்அந்
நூறும்பல விதம்

பித்தன்என ஏளனமாய்
பேசுகிற சகம்
பேச்சில்இரு பொருள்தொனிக்க
பீச்சுகிற ரகம்

கத்தியினை கண்களிலே
காட்டுகிற சகம்
கத்தலுக்கு மத்தியிலே
கரைகிறது யுகம்

எத்தனையோ பௌர்ணமிகள்
ஏகியது மெல
இவ்வருடம் அவ்வருடம்
என்றுயுகம் செல

சித்திரவ தைப்படுதல்
சித்த உள மிசை
செய்வதறி யாதுதவித்
தேன்உயிரை இசை

வரும்வரையும் வடிக்கிறது
வட்டவிழிக் குளம்
வந்துஅமர கவனமுடன்
வடிவமைத்த தளம்

கரும்பனைய எனதுமனம்
களிப்பதுநின் பெயர்
காதவழி தொடருவது
காரிகையின் உயிர்

உச்சரிக்கும் மந்திரத்தில்
உனதுபெயர் வரும்
உழலுகிற தீவினைகன்
ஒருநொடியில் அறும்

பிச்சிமலர் பெய்தகுழல்
பெரியமணம் தரும்
பெரியமண வாசனையில்
பேதைமனம் விழும்

பேதைஇவன் வாய்ப்பரப்பில்
பீடுநடை இடும்
பீடைஎனும் பேய்கள்வ
பிய்ந்துபட அழும்

சாதல்எனும் சங்கதிகள்
சம்பவிக்கும் முனம்
சார்ந்துவிடு சார்ந்துவிடு
தமியனது உளம்

யாருமிலை தனிமையிலே
அலைகிறது தினம்
ஆண்டுகொள அம்பிகைவா
அமர்கிறது மனம்

ஊருமிலை உறவுகளும்
ஒட்டவிலை நமை
உன்னுருவைப் பூரணமாய்
உறிஞ்சுதடி இமை

காட்டவிலை அருள்விளக்கம்
காரணமேன் உரை
கையில்ஒரு கோல்எடுத்தால்
காகிதத்தில் உறை

பாட்டளவில் பரிணமித்து
பாவனையில் நிறை
பாவ வினை யாஉடனே
பறந்துவிடும் குறை

உயிர்துடிக்கும் வாசகங்கள்
ஒலிக்கிறதா செவி
ஒன்றுமிலை என்னில்எமை
உன்இணையில் அவி

மயிர்சிர்க்கும் அவ்வளவு
மகத்துவங்கள் புரி
மங்கைநினை வாய் எரிக
மனவிளக்குத் திரி
user posted image

- m a g u d a d h e e b a n

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

Please log in to WordPress.com to post a comment to your blog.

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.